திங்கள், 3 பிப்ரவரி, 2014

"பண்ணு" தமிழாகவும், "பண்ணி" தமிழாகவும் ஆகிப் போன செந்தமிழ்!


"பண்ணு" தமிழாகவும், "பண்ணி" தமிழாகவும் ஆகிப் போன செந்தமிழ்!
தமிழர்களின் தாய் மொழியாம் தமிழ், தற்போதைய கால கட்டத்தில் மிகச் சிறப்பான அடை மொழி ஒன்றைப் பெற்று இருக்கிறது. அதென்ன அடைமொழி என்கிறீர்களா?

அது தான் நம்ம "பண்ணு/பண்ணி" தமிழ். தமிழைத் தாய்மொழியாக கொள்ளாதவர்கள் கூட, தங்களுக்கு தெரிந்த ஓரளவுக்கு நல்ல தமிழை அதன் இயல்பு மாறாமல் பேச முயற்சிக்கிறார்கள். ஆனால் தமிழ்த் தாயின் தவப்புதல்வர்களுக்கோ,தமிழ் மொழி என்பது,பெரும்பாலும் வெறும் இணைப்பு சொல்லாக,ஊறுகாயாக மட்டுமே பெரும்பாலான நேரங்களில் பயன்படுவது மிகுந்த வேதனைக்கு உரியது!

பெரும்பாலான இடங்களில், தங்க்லீஷைத் தான் தமிழர்கள் விரும்பி பேச முயற்சி செய்கிறார்கள்.அந்த தங்க்லீஷ் கூட அவர்களுக்கு வருகிறதோ இல்லையோ,ஆனால் எப்படியாயினும் வரிந்து கட்டி கொண்டு பேசியே ஆக வேண்டும் என்ற என்ன கட்டாயமோ தெரியவில்லை! ஆனால் விரும்பி செய்கிறார்கள்.

பத்து வார்த்தைகள் பேசினால்,அவற்றில் ஐந்து வார்த்தைகள் ஆங்கிலம் கலந்து பேசினால் தான் அறிவாளி என்று அவர்களாகவே எண்ணிக் கொள்கிறார்களா அல்லது அப்படி பேசினால் தான் மற்றவர்கள் தங்களை அறிவாளி என்று சொல்வார்கள் என்று சிந்திக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் அப்படி செய்வதில் பலருக்கு ஒரு அலாதி ஆனந்தம்!

இதெல்லாம் வழக்கமா இருக்குறது தானே! ஏன் திடீரென்று இதைப் பற்றி பேச வேண்டும்? சிலவற்றை சில நேரங்களில் அழுத்தி சொல்ல வேண்டும் என்று தோன்றுவதற்கு பல காரணங்கள் உண்டு.

அப்படியே இந்த தருணத்தில் இதை சொல்வதற்கு சில காரணங்கள் உண்டு!

பொதுவாக பல்வேறு பணி நிமித்தமாகவோ, அல்லது சினிமா போன்ற ஊடக துறையில் பணியாற்றுவதற்காகவோ வடநாட்டில் இருந்து, சென்னையை நோக்கி படையெடுப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.சென்னை வந்தவுடன் இவர்கள் எல்லோரும் பெரும்பாலும் கற்றுக் கொள்ளும் முதல் இரண்டு சொற்கள் ஒன்று வணக்கம். இன்னொரு சொல் நன்றி!

இந்த வணக்கம் என்ற சொல்லை, வண்க்கம் என்றோ வனக்கம் என்றோ பல பல ஒலியோசைகளில் அவர்கள் பயன்படுத்தினாலும் கூட,ஒருவரைப் பார்த்தவுடன் அவர்களின் தாய் மொழியில் வணக்கம் சொல்ல வேண்டும் என்பதை தொழிலுக்காகவாவது தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதைப் போலவே நன்றியும்.

தமிழன் கர்நாடகாவுக்கு சென்றால்,கன்னட மக்களைப் பார்த்து நமஸ்காரா என்றும் தன்யவாதகளு என்று சொல்லிப் பழகினாலும் பழகுவானே ஒழிய, வணக்கம், நன்றி என்ற சொற்களை தமிழ்நாட்டிலோ அல்லது தமிழர்களிடத்திலோ ஒருபோதும் பயன்படுத்தவே மாட்டான் அல்லது அப்படி சொல்வதில் ஒரு கவுரவக் குறைச்சல் என்றே எண்ணுகிறானோ என்றே தோன்றுகிறது!

வீடுகளில் அலைபேசிகளிலும், தொலைபேசிகளிலும் பேசும் பாட்டிமார்கள்,
அம்மாமார்கள்,அப்பாமார்கள் கூட ஹெலோ என்றும் தாங்க்யூ என்றும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.அப்படி இருக்க, அவர்களின் பிள்ளைகள் பற்றியும், பேரகுழந்தைகள் குறித்தும் சொல்லியாத் தெரிய வேண்டும். 

தமிழ்நாட்டில் பிழைப்புக்காக வருபவன் எல்லாம் வணக்கம் சென்னை, நன்றி சென்னை என்று பேசப் பழகி விட்டான். ஆனால் நம்மவர்களுக்கு தான் இந்த வார்த்தைகள் வேப்பங்காயாய் கசக்கிறது!ஒரு இரண்டு நிமிடம்,ஆங்கிலக் கலப்பின்றி தமிழில் பேசுங்கள் என்று சொன்னால், இங்கே பெரும்பாலானவர்கள் தோற்றுப் போய் விடுவார்கள்.

கடந்த வாரம் செவிலியர்கள் நடத்தும் போராட்டம் ஒன்றை தொலைக்காட்சியில் பார்த்தேன்.அப்போது ஒரு பேட்டியாளர்,இந்த போராட்டம் எதற்காக, எதை நோக்கி நகர்கிறது என்று அந்த செவிலிய மாணவிகளைப் பார்த்து கேட்கிறார். ஒரு மாணவி அதற்கான விளக்கத்தை சொல்ல இரண்டு நிமிடம் பேசுகிறார். ஆனால் அவர் பேசுவது தமிழா அல்லது வெறும் இணைப்பு சொல் மட்டுமே தமிழாக இருக்கிறதா என்று உன்னிப்பாக கவனித்தால், மிகவும் வருத்தமாக இருக்கிறது. அந்த பெண் பேசியதில் தொண்ணூற்று ஐந்து விழுக்காடு ஆங்கிலச் சொற்கள் மட்டுமே. ஆனால் பேட்டியோ தமிழில் என்கிறார்கள்.அடுத்த தலைமுறை பேசப்போகும் தமிழ் குறித்து கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை!

அய்யா சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் ஒரு காணொளியில் சொன்னார்கள். நான் அரசுப் பள்ளி மாணவர்களை அதிகம் நேசிக்க பல காரணங்கள் உண்டு. ஆயினும் முதலாவது காரணம் என்ன தெரியுமா? தாய் மொழி தமிழை,முறையாகப் படிப்பவர்கள் அவர்கள் மட்டும் தான்.

அதை அவர்கள் விரும்பி படிக்கிறார்களா அல்லது பல்வேறு குடும்ப பொருளாதார சூழல்களால் அப்படி படிக்க நிர்பந்திக்கப் படுகிறார்களா என்பது வேறு விவாதம்.

என் மொழியை முறையாக கற்பவன் அரசுப் பள்ளி மாணவன் என்பதால்,அவர்கள் மீது எப்போதும் எனக்கு சிறப்பான அன்பு உண்டு என்று சொன்னார். அவரது வாதம் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமே!

பெரும்பாலும் நம்மவர்கள் பேசும் தமிழ் எப்படி இருக்கிறது தெரியுமா?

காலையில் பிரஷ் பண்ணி, டிபன் பண்ணி, டிரஸ் அயன் பண்ணி, காரை டிரைவ் பண்ணி, லஞ்ச் முடிச்சு, ஈவினிங் ஸ்நாக்ஸ் முடிச்சு, நைட் டின்னெர் முடிச்சு என்றே முடிகிறது!

ஒன் கேஜி பொட்டேட்டோ ,டூ கேஜி ஆனியன், ஹால்ப் கேஜி டொமேட்டோ, டென் எக்ஸ்(முட்டை), டென் கேஜி ரைஸ் எல்லாத்தையும் பேக் பண்ணி அட்ரஸ்க்கு சென்ட் பண்ணிடுங்க!

இப்படித் தான் நமது அன்றாடத் தமிழ் இருக்கிறது என்பது வேதனைக்கு உரிய ஒன்று. மேலே நான் சொன்ன வாக்கியத்தில் எங்கே இருக்கிறது தமிழ்? பண்ணி தமிழா இருக்கு அல்லது முடிச்சு தமிழா இருக்கு? ஒழுங்கான தமிழ் எங்க இருக்கு?

இன்னும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் எல்லாம் ஹாப்பி பொங்கல்,ஹாப்பி நியூ இயர் என்றும் ,பண்டிகைகள் எல்லாம் ஹாப்பி தீவாளி, ஹாப்பி கிறிஸ்மஸ் ஹாப்பி ரம்சான் என்று எல்லாமே ஹாப்பியா மாறிப் போய் விட்டது.

தமிழர் விழாக்களுக்கு, தமிழில் வாழ்த்து சொன்னால் குறைந்தா போய் விடுவீர்கள்? பிறந்த நாள் வாழ்த்துக்கள், திருமண நாள் வாழ்த்துக்கள் எல்லாம் ஹாப்பி பெர்த் டே என்றும், ஹாப்பி வெட்டிங் டே என்றும் ஆகிப் போனது!

இன்றைக்கு பெரும்பாலான குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை மம்மி டாடி என்றும், உறவுகளை எல்லாம் அங்கிள் ஆன்டி என்றும் அழைக்கும் கேவலமான நிலை!

ஆனால் பிள்ளைகள் மம்மி டாடி என்று அழைப்பதில் அம்மாக்களுக்கும், அப்பாக்களுக்கும் என்ன ஒரு அலாதி ஆனந்தம்! அதிலும் சில பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் எழுதவோ, வாசிக்கவோ தெரியாது என்பதை சொல்வதில் கூட என்ன ஒரு பெருமிதம்!எங்க போய் சொல்ல,இந்த கொடுமையை எல்லாம்!

தமிழில் இருப்பது போன்று,அனைத்து உறவுகளுக்குமான சொற்கள் ஆங்கிலத்தில் உண்டா? சித்தி என்றாலும் அத்தை என்றாலும் அனைத்தும்,ஆங்கிலத்தில் ஆன்டி என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கிப் போகும். சித்தப்பா என்றாலும் மாமா என்றாலும் அங்கிள் தான்!. இப்படித் தான் பெரும்பாலான உறவுகளை பிரித்து அறிய முடியாத அளவுக்கு ஆங்கில வார்த்தைகள் இருகின்றன.ஆனாலும் கூட உறவுகளை ஆங்கிலத்தில் சொல்வதற்கு தான் நமக்கு இனிக்கிறது!

குடும்ப உறவு முறைகளுக்கு,மிக அழகான சொற்களை தமிழ் வைத்திருக்கும் போது, என்ன உறவு முறை என்றே தெரியாத அளவுக்கு அங்கிள், ஆன்டி எதற்கு?

தமிழனுக்கு ஏன் இந்த கொலைவெறி? ஏன் இந்த அளவுக்கு அந்நிய மோகம்?

பிற மொழிகளை அவை தேவைப்படும் இடங்களில் தாரளமாக பயன்படுத்தலாம்.தவறே இல்லை. ஆனால் தாய்மொழி தேவைப்படும் இடங்களில் ஆங்கிலமும், தங்க்லீஷும் அருவருப்பு!

பிற மாநிலங்களில் பணி புரிகிறோம், வேறு வழியில்லாமல் பேச வேண்டிய சூழல் என்பது வேறு. ஆனால் சொந்த மண்ணிலேயே இந்த கூத்து தான் நடக்குது!மொழி சிதைவைக் குறித்து அதீத அக்கறை எடுத்தாக வேண்டும். ஏற்கனவே தமிழ் வாசிக்க தெரியாத, எழுத தெரியாத ஒரு தலைமுறை உருவாகி விட்டது.இன்றைய பெரும்பாலான குழந்தைகளுக்கு,வீட்டில் பேசப்படும் வழக்கு மொழியாக மட்டுமே தமிழ் இருக்கிறது. தமிழில் வாசிக்கவோ,எழுதவோ தெரியாத சூழலில்,இந்த குழந்தைகள் பேசும் பேச்சுத் தமிழும் வெறும் "பண்ணி" தமிழாகி போனால்?? சிந்தித்துப் பாருங்கள்!

கடந்த வாரம் "சூப்பர் சிங்கர்" என்ற நிகழ்வில் திவாகர் என்ற ஒரு தமிழன் அந்த போட்டிப் பரிசை வென்றான் என்றவுடன் எத்தனை ஆனந்தம் நம்மில் பலருக்கு, ஏன் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் என்றே கூட சொல்லலாம். அப்படித் தான் இருந்தது எனக்கும். உடனே ஒரு பாராட்டு பதிவைக் கூட எழுதினேன். அப்படி பாராட்டும் நேரத்தில் விமர்சனம் வைக்க வேண்டாம் என்பதால் திவாகர் மீது விமர்சனம் வைக்கவில்லை. அப்படி என்ன விமர்சனம்?

மேடையில் அந்த தம்பி பாடி முடிக்கிறார். ஜானகி அம்மா நடுவர் மேடையில் இருந்து எழுந்து சென்று,அந்த தம்பியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அவருக்கு தெரிந்த அழகு தமிழில் வாழ்த்துகிறார். ஜானகி அம்மாவுக்கோ தாய் மொழி தமிழ் கிடையாது. ஆனால் தமிழில் வாழ்த்துகிறார். ஆனால் அந்த தம்பி தாங்க் யூ அம்மா, தாங்க் யூ சோ மச் அம்மா என்கிறார்.

ஏம்பா தம்பி! நன்றி அம்மா,மிக்க நன்றி அம்மா என்று சொன்னால் குறைந்தா போய் விடுவீர்கள்? இது அந்த தம்பிக்கானது மட்டும் அல்ல. நம்மிலும் அநேகர் இப்படித் தான் இருக்கிறோம்!இதையெல்லாம் சின்ன சின்ன விடயங்களாக எடுத்துக் கொள்ள இயலாது!

இசை உலகில் பல்வேறு ஜாம்பவான்களை எல்லாம் நமக்கு பிடித்திருந்தாலும் கூட, இசை அமைப்பாளர்களில் ஏ.ஆர். ரெஹ்மான் மீது எப்போது ஒரு கூடுதல் அன்பு நமக்கு உண்டு. அதற்கு அவரது தனிப்பட்ட சில நல்ல பண்புகள்,குணாதிசயங்கள் எல்லாம் உண்டு. அதைப் பற்றி மட்டும் ஒரு பெரிய பதிவே எழுதலாம். பல்வேறு தமிழ் நேர்காணல்களில் ஆங்கிலத்திலும், அதீத ஆங்கிலக் கலப்பிலும் ரெஹ்மான் பேசினாலும் கூட, தன் இரு கரங்களிலும் ஆஸ்கார் விருதுகளை பெற்றுக் கொண்டு,உலக நாயகர்கள்/நாட்டை சேர்ந்தவர்கள் எல்லாம் அமர்ந்திருக்கும் ஆஸ்கார் மேடையில் நின்று கொண்டு, அன்னைத் தமிழில், அழகு தமிழில் "எல்லாப் புகழும் இறைவனுக்கே"என்று சொன்னான் பாருங்கள், அந்த கணம் வாழ்வில் மறக்க முடியாத தருணம்!

அப்படி தமிழில் தான்,சொல்ல வேண்டிய கட்டாயமோ அவசியமோ கூட இருந்திருக்காது. ஆங்கிலத்தில் சொல்லி இருக்கலாம் அல்லது இந்தியில் கூட சொல்லி இருக்கலாம்.ஆனால் அப்படி இல்லாமல்,அந்த மேடையில் தன்னை ஒரு தமிழனாக அடியாளப்படுத்திக் கொண்ட கணம் ரெஹ்மான் மீதான மரியாதையை இன்னும் இரண்டு மடங்காக கூட்டியது என்பது மிகை அல்ல.

அலுவலகங்களிலும், பணி நிமித்தமான விவாதங்களிலும் எப்படி ஆங்கிலம் பேசும் போது,தாய் மொழி கலக்காமல் பேச வேண்டும் என்று கவனமாக இருக்கிறீர்களோ, அதைப் போலவே தமிழில் பேசும் போதும் பிற மொழிக் கலப்பின்றி அதீத் கவனத்துடன் பேசப் பழக வேண்டும்.நம்மில் பலர் சொல்வதுண்டு! ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ் வார்த்தைகள் எங்களுக்கு தெரியவில்லை அல்லது இல்லை என்று சொல்லி தப்பிப்பதுண்டு.

நவீன கணினி மற்றும் வலையத்தள அறிவியல் காலத்துக்கு ஏற்ப,ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ்சொற்கள், கலைச்சொற்கள் ஏராளம் வந்து விட்டன.சிக்கல் என்னன்னா ஆங்கிலத்தில் பேசும் போது, தங்கள் ஆங்கில மொழிப் புலமைக்காக ஆங்கில சொல்லையும் அதற்கு இணையான பல ஆங்கில சொற்களின் அர்த்தத்தையும் தேடித் தேடி படிக்கும் நமக்கு,தங்க்லீஷில்(தமிழில்) பேசும் போது,நாம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான தமிழ் சொல்லை தேடிப்பார்க்க பொறுமை இல்லை, அக்கறை இல்லை அல்லது அலட்சியம்! என்னையும் சேர்த்தே! ஆனால் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

குறைந்த பட்சம் வெளி மாநிலங்களில்,வெளி நாடுகளில், ஏன் சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் அல்லது பணி புரியும் அனைவருமே, தங்கள் குழந்தைகள் தமிழில் எழுதுவதையும், வாசிப்பதையும் கட்டாயம் உறுதி செய்வது தமிழுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய தொண்டு! அலைபேசிகளிலும் தொலைபேசிகளிலும் தமிழர்களோடு உறவாடும் போது, வணக்கம், நன்றி என்று சொல்லிப் பழகுவோம்!

உலகின் எந்த மொழிகளை வேண்டுமானாலும் நீங்களும், உங்கள் குழந்தைகளும் படியுங்கள். ஆனால் எந்த மொழி பேசினாலும் அந்தந்த மொழிகளை அதனதன் இயல்புகளோடும், தனித் தன்மைகளோடும், பிற மொழி கலப்பின்றியும் பேசப் பழகுங்கள், பேச கற்றுக் கொடுங்கள் !
மொழிப்பற்றின் முதல் படி இதுவே!

தாயெழிற் றமிழை, என்றன்
தமிழரின் கவிதை தன்னை
ஆயிரம் மொழியிற் காண
இப்புவி அவாவிற் றென்ற
தோயுறும் மதுவின் ஆறு
தொடர்ந்தென்றன் செவியில் வந்து
பாயுநாள் எந்த நாளோ,
ஆரிதைப் பகர்வார் இங்கே?

என ஏக்கத்தோடு பாடுவான் புரட்சி கவிஞன் பாரதிதாசன்.

தன் தாய் மொழிக்கு, தலை வணக்கம் செலுத்தாத எந்த நாடும் வாழாது! எந்த சமூகமும் வாழாது! என்றான் வார்த்தை சித்தர் வலம்புரி ஜாண்.தன் தாய் மொழியை நேசிக்காத, தன் தாய் மொழியில் பேசுவதை குறைவாக, கொச்சையாக, கேவலமாக நினைக்கும் ஒரு தலைமுறை,ஒரு போதும் வாழ்ந்ததாக வரலாற்றில் குறிப்பே இல்லை,இது சத்தியம் என்பதையும் சேர்த்தே பதிவு செய்தான்.


வாழ்க தமிழ்!

சிந்திப்போம்! சீர் படுத்துவோம்!

குறிப்பு:

என் நினைவு அறிந்து, கடந்த பத்து ஆண்டுகளாக அலைபேசியிலும்,தொலைபேசியிலும் தமிழர்களோடும்,நண்பர்களோடும் பேசும் போது வணக்கம்,நன்றி என்ற வார்த்தைகளையே கூடுமானவரையில் பயன்படுத்தி வருகிறேன்! பிறந்த நாள், திருமண நாள், தமிழர் விழாக்கள் அனைத்துக்குமான வாழ்த்துக்கள் அனைத்தையும் தமிழிலேயே சொல்லி வருகிறேன்.என் நண்பர்களில் சிலரும் இப்படித்தான் இருக்கிறார்கள்!இதில் பெருமைப் பட எதுவும் இல்லை என்றாலும் கூட,நம் கடமை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்!

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக